புங்குடுதீவு-4 பிட்டியம்பதி காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலய வரலாறு ஒரு கண்ணோட்டம்
இலங்கையின் வடபுலத்தே அமைந்துள்ள யாழ்குடா நாட்டின் ஊசி முனைகளாக விளங்கும் ஏழு தீவுகளிலும் நடுவனாக விளங்குவது புங்குடுதீவு ஆகும். இவ் அழகிய ஊரிலே 19ம்நூற்றாண்டின் முற்பகுதியிலே இக் கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. இக் காலப்பகுதியில் இங்கு கம்மாலை (இரும்பு வேலை) வைத்திருந்த சின்னப்பழனி,பெரியபழனி சகோதரர்கள் அங்கு நின்ற மாவிலங்கை மரத்தடியில் தங்களின் குலதெய்வமாகிய காளியின் வழிபாட்டுக்காக இரும்பாலான சூலத்தை வைத்து வழிபட்டுள்ளனர் என்று இவ்விடத்தைச் சேர்ந்தவரும் சமய ஆர்வலருமான சண்முகம் அவர்களின் கூற்றுப்படி அறிய முடிகின்றது. மேற்கூறப்பட்டுள்ள மாவிலங்கை மரமானது தற்பொழுதும் கோவிலின் உள் வீதியிலே தெற்கு புற வாசலில் நிற்பதை காணமுடிகின்றது.
வயதான பெரியவர்களிடம் இம் மரத்தின் வயது என்னவென்று கேட்டால் தாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த காலத்திலிருந்தே இம் மரம் இப்படியேதான் இருந்தது என்பார்கள். அப்படி ஓர் சிறப்புடன் கூடிய இம் மரத்தின் விசேட அம்சம் என்னவென்றால் இது பருப்பதுவுமில்லை, கிளைகள் படுவதுமில்லை. தொடக்கத்திலே மரத்தின் கீழே இரும்புச்சூலம், சங்கு, சேமக்கலத்துடன் இக் கோவில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. பின்னர் 1939, 1940ம் ஆண்டு காலப்பகுதியிலே மூலஸ்தானமும், ஏனைய மண்டபங்களும் கட்டப்பட்டு இரும்பாலான சூலம் செப்புச்சூலமாக செய்யப்பட்டு மகாகும்பாபிசேகம் செய்யப்பட்டது.
எனினும் 1964ம் ஆண்டளவில் பாலஸ்தாபனம் நடைபெற்று திரு. நாகலிங்கம் எனும் பிரபல ஆச்சாரியாரால் கோவிலின் அளவுகள் அளக்கப்பட்டு மூலஸ்தான பண்டிகையும், மண்டபங்களும் சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டு மூலவிக்கிரகம் கருங்கல்லினால் அமைத்து 1967ம் ஆண்டு மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. அத்தோடு கைலாசநாதக்குருக்களினால் அதுவரை காலமும் காளிதேவி என அழைக்கப்பட்டு வந்த அம்பாளுக்கு காளிகாபரமேஸ்வரி எனும் நாமம் விசேட சுலோகத்திலே சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
1968ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் வரும் ஆனிமாத உத்தரநட்சத்திரத்தினைத் தீர்த்த திருவிழாவாக கொண்டு மகோற்சவம் நடைபெற்று வந்துள்ளது. 1979ம் ஆண்டு புனராவர்த்தன மகாகும்பபிசேகம் நாகேந்திரக் குருக்கள் தலைமையிலே மிக சிறப்பாக நடைபெற்றது.
1968ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் வரும் ஆனிமாத உத்தரநட்சத்திரத்தினைத் தீர்த்த திருவிழாவாக கொண்டு மகோற்சவம் நடைபெற்று வந்துள்ளது. 1979ம் ஆண்டு புனராவர்த்தன மகாகும்பபிசேகம் நாகேந்திரக் குருக்கள் தலைமையிலே மிக சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின் பல விதங்களிலும் இக் கோவில் சிறப்பு பெற்றது.இவ் ஆலயத்தின் முன்புறம் தீர்த்தக்குளம் உள்ளது.குளத்திற்கு தெற்கிலும் கிழக்கிலும் ஆலமரம், அரசமரம் என்பன காணப்படுகின்றன. 1991ம் ஆண்டு நாட்டு நெருக்கடி சூழ்நிலையால் பெரும்பாலானோர் ஊரைவிட்டு வெளியேற நேரிட்டது. இதனால் ஒழுங்காக பூசைகள் நடைபெறவில்லை. பின்னர் 1996ம் ஆண்டு நடுப்பகுதியில் சிலர் மீண்டும் ஊருக்கு திரும்பியதால் பூசைகள் வழமை போல் நடைபெறத்தொடங்கின. ஆலயத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ளூரிலும், வெளியூரிலும் உள்ள அடியார்களின் நிதியுதவியுடன் பழைய வசந்தமண்டபம் இருந்த இடத்தில் புதிய வசந்தமண்டபம் அமைக்கப்பட்டதுடன் ஐந்து தளங்களை கொண்டதாக கட்டி முடிக்கப்பட்ட இராஜகோபுர கும்பபிசேகம் 2005ம் ஆண்டு நிறைவுபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக